‘ரோல் மாடலான நீங்களே இப்படி செய்யலாமா?’ – சோனு சூட்டை கடுமையாக விமர்சித்த ரயில்வே!

ஓடும் ரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பிரபல இந்திய நடிகர் சோனு சூட் பதிவுசெய்திருந்த நிலையில், அதற்கு வடக்கு ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் வேடத்தில் வந்து கலக்கி வருபவர் சோனு சூட். அதையும்விட இவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவிப் புரிந்து வந்ததால், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானார். தற்போதும் திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் நடத்திவருவதுடன், உதவி கேட்கும் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகைள செய்து வருகிறார் சோனு சூட்.
இந்தநிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி ஓடும் ரயிலின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சோனு சூட் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவின் பின்னணியில் ‘Musafir Hoon Yaaro’ என்றப் பாடலும் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்குத்தான் வடக்கு ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “அன்புள்ள, சோனு சூட் அவர்களே, நாட்டிலும், உலகிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. ரயில் படிகளில் பயணம் செய்வது ஆபத்தானது, மேலும் இதுபோன்ற வீடியோக்கள் உங்கள் ரசிகர்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கலாம். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்! சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை தொடரவும்” என்று குறிப்பிட்டுள்ளது.

प्रिय, @SonuSood

देश और दुनिया के लाखों लोगों के लिए आप एक आदर्श हैं। ट्रेन के पायदान पर बैठकर यात्रा करना खतरनाक है, इस प्रकार की वीडियो से आपके प्रशंसकों को गलत संदेश जा सकता है।

कृपया ऐसा न करें! सुगम एवं सुरक्षित यात्रा का आनंद उठाएं। https://t.co/lSMGdyJcMO
— Northern Railway (@RailwayNorthern) January 4, 2023

இதையடுத்து வடக்கு ரயில்வேயின் பதிவிற்கு, நடிகர் சோனு சூட் பதிலளித்துள்ளார். அதில், “மன்னிக்கவும், கன்ஃபார்ம் டிக்கெட்டை வாங்க முடியாமல், தினமும் ரயில் கதவுகளில் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக இதைச் செய்தேன். இந்த செய்திக்காக நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மும்பை ரயில்வே போலீஸ் கஷினரும் இதுதொடர்பாக எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிந்திருந்தார். அதில், “படங்களில் வேண்டுமானால் ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். நிஜ வாழ்க்கையில் அவ்வாறு கிடையாது. அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும்” என்று கூறியிருந்தது. புறநகர் ரயில்களின் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வோர் ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதைத் தடுக்க ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பிரபலங்களின் இதைப்போன்ற வீடியோக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.