ஜம்மு: காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், தற்போது கிராம புறங்களில் பைக்கில் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி அடுத்த டாங்க்ரி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை கண்டித்து அப்பகுதி மக்கள் டாங்கிரியில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை ரஜவுரி மாவட்டம் நவுஷேராவுக்கு அருகிலுள்ள தல்கா பகுதியில் 3 தீவிரவாதிகள் பைக்கில் சென்றனர். அதை பார்த்த மக்கள் உள்ளூர் போலீசுக்கு தகவல்கள் கொடுத்தனர். பைக்கில் சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் துரத்திச் சென்ற சிறிது தூரத்தில் அவர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.
இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘பைக்கில் சென்ற 3 நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதால், அவர்களை தேடி வருகிறோம். அவர்கள் சென்ற பைக்கில் நம்பர் பிளேட் இல்லை’ என்று கூறினர். இருந்தும் தீவிரவாதிகள் பைக்கில் அப்பகுதியில் சுற்றித் திரிவதால், மீண்டும் தாக்குதல் நடத்துவார்களா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.