தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினையொட்டி வெல்ல ஆலைகளில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் கலப்படமின்றி வெல்லம் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், விதிமுறைகள் மீறல் கண்டறியப்பட்டால் உரிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் சாந்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் அலுவலர்கள் பாப்பாரப்பட்டி, வேலம்பட்டி, பனந்தோப்பு, தட்டாரப்பட்டி, பாலக்கோடு காவாப்பட்டி பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு கரும்பாலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 500 கிலோ அளவிலான வெல்லம், செயற்கை நிறமேற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஒரு கரும்பாலையில் சோடியம் ஹைட்ரோசல்பேட் ரசாயனம் கெமிக்கல் 25கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கரும்பாலையில் இருந்த வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பபட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கரும்பு ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.