கோவை, மாதம்பட்டி பகுதியில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக-வினர் எல்லா பக்கமும் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என மக்கள், அரசு அதிகாரிகள் நினைக்கின்றனர்.
திமுக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே சொத்து வரி உயர்கிறது. காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். எங்கள் மீது பொய் வழக்கு போட்டால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது வேறு மாதிரி இருக்கும்” என்றார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்குப் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. கோவையை புறக்கணிக்கின்றனர். கூட்டணி விவகாரத்தில் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
கூட்டணி பேசும்போது நானும்தான் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. தமிழ்நாட்டில் திமுக பெரிய கட்சி கிடையாது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பலமாக உள்ளது. திமுக-வுக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்துப் போட்டியிட சொல்லுங்கள். எங்களுக்கு இணையான கட்சி வேறு இல்லை. கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்வோம். தற்போது நிறைய கட்சிகள் நாங்கள் வளர்ந்து விட்டோம் என சொல்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் பலம் அதிமுக-வுக்கு மட்டுமே உள்ளது. அதை சிலர் மறைக்க முயற்சிக்கின்றனர். ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி போய்விடும்” என்றார்.