மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மலையின் இயற்கை அழகையும், இதமான குளிரையும் ரசிக்க கோடை காலம் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் கொடைக்கானல் மலையில் கிடைக்கக்கூடிய போதை காளான்களை ருசிப்பதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் படையெடுக்கின்றனர்.
அந்த வகையில், புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலிருந்து 5 இளைஞர்கள் கொடைக்கான லுக்கு வந்துள்ளனர். அவர்களில் 2 இளைஞர்கள் வனப்பகுதிக்குள் சிக்கி 3 நாள்களுக்குப் பிறகு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியிலிருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாரிடம் விசாரித்தோம். “புத்தாண்டு தினத்தன்று கொடைக்கானலில் தங்கியிருந்தவர்கள் மறுநாள் போதை காளான்களை தேடி கொடைக்கானலிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில், பூண்டி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு போதை காளான்களை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் பூண்டி பகுதியிலேயே தங்கிய அவர்கள், மீண்டும் போதை காளான்களைப் பணம் கொடுத்து வாங்க விரும்பாமல் வனப்பகுதிக்குள் காளான்களை தேடிச் சென்றுள்ளனர். இந்த 5 பேரில் 2 பேர் ஒரு பிரிவாகவும், 3 பேர் ஒரு பிரிவாகவும் பிரிந்து போதை காளான் பறிப்பதற்காகச் சென்றுள்ளனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு மூவராக சென்ற கூட்டம் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்தடைந்தனர். அப்போது அல்தாப் (26), ஆசிப் (23) ஆகியோர் மட்டும் திரும்பவில்லை. அவர்களின் போனுக்கு அழைத்தபோதும் லைன் கிடைக்கவில்லை. இரவுவரை காத்திருந்து அவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தும் வரவில்லை. அதையடுத்து அப்பகுதியினரிடம் கூறி தேடியுள்ளனர்.
வனப்பகுதிக்குள் கிராம மக்கள் உதவியுடன் ஏராளமானோர் சென்று தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையில், தீ தடுப்பு கோடுகள் போடும் பணிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் நடைபெற்று வருகிறது. அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சத்தம் கேட்டு, அந்த இளைஞர்கள் அவர்களை நோக்கிச் சென்று தாங்கள் காட்டுக்குள் சிக்கிய தகவலை கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காப்பாற்றிய பணியாளர்கள் பூண்டி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அந்த இளைஞர்கள் சுமார் மூன்று நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.
வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்றதற்கும், போதை காளான் பயன்படுத்தியதற்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீஸார் அவர்களை விடுவித்தது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.