பெரம்பூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 76வது வட்ட திமுக சார்பில், “இன எழுச்சியின் முழக்கமே’’ என்ற தலைப்பில் ஓட்டேரி பிரிக்ளின் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 76வது வட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர்கள் சரிதா மகேஷ் குமார், ஸ்ரீ ராமலு, பகுதி செயலாளர்கள் சாமிகண்ணு, தமிழ்வேந்தன், வர்த்தகர் அணி அமைப்பாளர் உதயசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது;
இந்த பிறந்த நாள் விழாக்கள் சடங்கு சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுபவை அல்ல. பேராசிரியர் போன்றவர்கள் கடந்து வந்த பாதையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்லி வரலாற்றை புரிய வைக்கவேண்டும் என்கிற நோக்கில் இந்த விழாக்கள் நடைபெறுகின்றன. பேராசிரியரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமானால் திராவிட இயக்கத்தின் வரலாறு, இன்று மரமாக வளர்ந்திருக்கும் திமுகவின் வரலாறு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். வரலாற்றை உங்கள் பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பேராசிரியர் சொல்லுவார், முதலில் நான் மனிதன், பின் அன்பழகன், அடுத்து சுயமரியாதைகாரன், நான்காவதாக அண்ணாவின் தம்பி, ஐந்தாவதாக கலைஞரின் தோழன் என்பார்.
இதைச்சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லுவார், ஆறாவதாக அவர் என் பெரியப்பா என்று கூறுவார். உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம் ஒதுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். மகளிர் முன்னேற்றம் திமுகவின் முக்கிய நோக்கம். இதை ஆரம்பத்தில் இருந்து செய்தவர் பேராசிரியர் அன்பழகன். வாரிசு அரசியல் என்று பலரும் பேசுகிறார்கள். 100 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேர் அவர்களின் பிள்ளைகளாக இருக்கின்றனர். மீதி 90 சதவீதம் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். 75 ஆண்டு காலம் நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கலைஞரும், பேராசிரியரும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது திராவிட இயக்க கொள்கைகளை பரப்பியவர் பேராசிரியர். சிறுவயதில் இருந்து தமிழ் உணர்வோடு போராடியவர் தான் பேராசிரியர். சென்னை டிபிஐ வளாகத்துக்கு அன்பழகனார் பெயரைச் சூட்டி இருக்கிறாரே முதல்வர். அதுதான் பேராசிரியருக்கு அவர் கொடுக்கும் மரியாதை, பெருந்தன்மை. காயத்ரி மேல படவேண்டிய கோபத்தை யூடியூப் காரர்கள் மேல் காட்டுகிறார் ஒருவர். ஆளுநர் கால்டுவெல்லைப் பற்றி பேசுகிறார்.
வரலாறு என்றால் ஒரு காலத்தில் வட இந்திய வரலாறாகத்தான் இருக்கும். ஆரிய, சிந்து சமவெளி நாகரீகம் என வரலாறு இருக்கும். கால்டுவெல் வந்த பிறகு தான் தென்னிந்திய வரலாறுகளை எழுதினார். கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு, கோயிலுக்குள் செல்லக் கூடாது, அரசு பணிக்கு செல்லக் கூடாது, இந்த தெருவுக்குள் செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டதால் தான் பெரியார் கடவுள் இல்லை என்றார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.