பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாகவே பத்திரிகையாளர்களிடம் ஏடா கூடமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக செய்து வருகிறார்.
இது போதாதென கேடி ராகவன், மதன் ரவிச்சந்திரன், திருச்சி சூர்யா, டெய்சி சரண், காயத்ரி ரகுராம் என பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விவகாரங்களில் அண்ணாமலையே திரைமறைவில் காரணமாக இருந்து கட்சியின் செல்வாக்கும் அதல பாதாளத்துக்கு செல்ல வழிவகுத்தார் என்றும், கட்சியில் பரவலாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக, அண்ணாமலைக்கு டெல்லி தலைமை கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதாகவும், இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வைரலாக பரவியபடி இருந்தது.
இதற்கிடையே அண்ணாமலையை கண்காணிக்க பாஜகவுக்குள் தனி படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய நடவடிக்கைகள் குறித்து டெல்லி தலைமை உடனுக்குடன் ரிப்போர்ட் அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
டெல்லி தலைமையின் முடிவுக்கு தமிழக பாஜ மூத்த நிர்வாகிகளும் ஆதரவாக உள்ளதாக கூறப்பட்டதால், எந்த நேரமும் அண்ணாமலை மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ரஃபேல் வாட்சுக்கு பில், காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலையை கேள்வியால் குடைந்து எடுத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத அண்ணாமலை எதற்கு பதில் சொல்ல தெரியாமல், ‘என்ன கேள்வி கேட்க உங்களுக்கு எப்படி உரிமை இருக்கோ அதே கேள்வி கேட்கும் உரிமை எனக்கும் இருக்கு.
இங்க வர்றவங்க எல்லாம் கட்சியில யாரோ சொன்னாங்கன்னு தான், தூக்கிட்டு வர்றீங்க. உங்களுக்கு திமுக கிட்ட கேள்வி கேட்க தைரியம் இருக்கா? கமலாலயம் வந்தால் மட்டும் எக்ஸ்ட்ரா தைரியம் வருது?
கட்சி சேனல் நடத்துறவங்க எல்லாம்.. என் கிட்ட பேசாதீங்க. டிஜிட்டல் மீடியா, யூடியூப், 4 லைக் போட வேண்டும், 4 ட்வீட் போட வேண்டும்னு.. 40,000 ரூபாய் கேமராவ வாங்கிட்டு வந்து பிரஸ் மீட்டில் உட்கார்ந்துட்டு பேசுறாங்க’ என கூறியதோடு நிருபரிடம், ‘உங்களுடைய சேனல் பேர் என்ன?’ என கேட்டு திடுக்கிட வைத்தார்.
அத்துடன் இல்லாமல் சில பத்திரிகையாளர்களிடம் ‘தனியாக ஆபிஸ் ரூமுக்கு வாருங்கள். பஞ்சாயத்து வைத்து கொள்வோம்’ என சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் அழைப்பது போல கூப்பிட்டு தனக்கு இருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.
இதை பத்திரிகையாளர் சங்கங்கள் கடுமையாக கண்டித்துள்ளதோடு, பெரிய அளவில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தி பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அண்ணாமலைக்கு மட்டுமில்லாமல் தமிழக பாஜகவுக்கும் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் போன்ற அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து தெறிக்க விட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் தான் இனியும் அண்ணாமலையை தலைவராக வைத்திருந்தால் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக மண்ணை தான் கவ்வும் என்பது போன்ற ரிப்போர்ட் தயார் செய்து மூத்த நிர்வாகிகள் டெல்லி தலைமைக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை மோப்பம் பிடித்து தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருப்பதிக்கு விரைந்து பெருமாளிடம் சரண் அடைந்ததாகவும் தனது பதவியை காப்பாற்றி கொடுக்க வேண்டும் என தஞ்சம் அடைந்ததாகவும் கட்சியினரே சொல்லி ஏளனமாக சிரிக்கின்றனர்.
இன்னும் சிலரோ, ‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. போப்பா.. போ’ என்பது போல் சற்று நக்கல் தூக்கலான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வேற லெவலில் ஃபன் செய்து வருகின்றனர்.