நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காங்கமுத்து (39). இவர், அதே பகுதியிலுள்ள ஆவின் பாலக சொசைட்டியில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு, மஞ்சு என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே போல், சிங்கிலிகோம்பை அருகேயுள்ள வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவர், அதே பகுதியில் உள்ள வாழப்பாடி சாலையில் சக்தி ஹோமியோபதி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். காங்கமுத்து இன்று காலை சக்திவேலின் கிளினிக்குக்கு வயிற்றுவலிக்கான சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார். இதற்கு, ஹோமியோபதி மருத்துவர் ஊசி போட்டு, மாத்திரை கொடுத்தாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காங்கமுத்துக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக, ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல், ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கமுத்துவைச் சேர்த்திருக்கிறார்.
இந்தத் தகவலை அறிந்த உறவினர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு காங்கமுத்துவைக் கொண்டுசென்றனர். ஆனால், அங்கு காங்கமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், காங்கமுத்து ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். காங்கமுத்துவின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து, மங்களபுரம் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இவருடைய மரணத்தில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் மங்களபுரம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதோடு, இந்தச் சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.