சப்ரூம்: அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநில பாஜ அரசின் சாதனைகளை விளக்கும் ரத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் அயோத்தி ராமர் கோயில் பிரச்னை நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னர் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019ல் காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய விமான படையினர் பாலாகோட் தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தர்மா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா,‘‘திரிபுராவில் பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முன் தீவிரவாதம்,போதை கடத்தல்,நாட்டுக்கு எதிரான சதிகள் என பல்வேறு செயல்கள் நடந்தன. தற்போது மாநிலத்தில் வளர்ச்சி, சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதிக முதலீடுகள் ஈர்ப்பு என அனைத்து தரப்பிலும் திரிபுரா வளர்ச்சி அடைந்து வருகிறது’’ என்றார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ராமரர் கோயிலை கட்டி முடிக்க பாஜ அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த அறிவிப்பால் மக்களவை தேர்தலில் ராமர் கோயிலை கட்டி முடித்தது தங்களது சாதனையாக குறிப்பிட்டு பாஜ பிரசாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.