கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் தாமதமாகவே துவங்கியது. தற்போது கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிகமாக கொட்டி வருகிறது. மலைப்பகுதிகளில் பல இடங்களில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது.
தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி தாக்கத்தால் வெயில் வந்த பிறகே ஏரி பகுதியில் நடைப்பயிற்சியை மக்கள், சுற்றுலாப்பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏரி பகுதி சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாகவே திறந்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் காலையில் தாமதமாகவே தங்களது பணிகளை துவக்கி வருகின்றனர். மாலை நேரத்தில் விரைவில் தங்களது பணிகளை முடித்து விடுகின்றனர்.
கடுமையான பனி காரணமாக கொடைக்கானலில் உள்ள வயதானவர்கள் மற்றும் சளி தொந்தரவு உள்ளவர்கள் வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர். கொடைக்கானல் வாசிகள் பகல் பொழுதில் இருந்து கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதுபோல இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தியும், இரவில் படுக்கையில் கம்பளிகளை கூடுதலாக பயன்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். கொடைக்கானலில் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. மேல் மலைப்பகுதிகளில் வெள்ளைப்பூண்டு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. கடுமையான குளிர் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.