தமிழக அரசு மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை: கேஎஸ் அழகிரி

சென்னை: தமிழக அரசு மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று( வியாழக்கிழமை ) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நாள்தோறும் அவதூறுகளையும், அபத்தங்களையும் கருத்துக்களாக வெளியிட்டு வருகிறார். இவரது ஆதாரமற்ற கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டால் செய்தியாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுவது தொடர் கதையாகி வருகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிற ஊடகத் துறையை மிகமிக கேவலமாக நடத்துவது குறித்து பத்திரிகையாளர்கள் சங்கமே கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், அண்ணாமலை பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் பாஜக-வில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘அண்ணாமலை தலைமையில் இருக்கிற பாஜக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். அதேநேரத்தில், பெண் காவலர்களுக்கு தொல்லை கொடுத்ததாக புகார் வந்தவுடனே திமுக-வினர் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற தவறுகளை திமுக உள்ளிட்ட எவர் செய்தாலும் அவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதைப் பாராட்ட மனமில்லாத அண்ணாமலை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று புலம்புகிறார். உண்மையிலேயே அண்ணாமலையினால் தான் பா.ஜ.க.வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தாமல் தமிழகக் காவல்துறை மீது பழி போடுவதற்கு இவருக்கு எந்த உரிமையும் இல்லை. அதுபோல, பட்டியலின மக்கள் தமிழகத்தில் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார். ஆனால், தேசிய அளவில் பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2019 இல் 45,961 ஆக இருந்தது, 2020 இல் 50,291 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது 11 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இந்த குற்றங்களில் பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் மட்டும் 74 சதவிகிதம் நிகழ்ந்திருப்பதாக அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுபோல, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரசில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இறுதிச் சடங்கு கூட செய்ய வாய்ப்பு தராமல் காவல்துறையினரே சுடுகாட்டில் தன்னிச்சையாக எரித்த கொடுமை நிகழ்ந்ததை யாரும் மறக்க முடியாது. பாஜக என்பது வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துகிற இயக்கமாக மாறிவிட்டது.

பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிற நிலையில், அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக் கூறுவது அப்பட்டமான அவதூறாகும். இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். இந்த கடன் அனைத்துமே கடந்த கால அதிமுக ஆட்சியின் பொறுப்பற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்டதாகும். இதற்கு திமுக அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல. ஆனால், மத்திய பாஜக ஆட்சியில் 2014ம் ஆண்டு மொத்தக் கடன் தொகை ரூபாய் 53.11 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது டிசம்பர் 2022 இல் ரூபாய் 136 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அது மேலும் மார்ச் 2023 இல் ரூபாய் 152 லட்சம் கோடியாக உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மொத்த கடன் தொகை ரூபாய் 83 லட்சம் கோடி. இந்தியாவையே கடன்கார நாடாகத் திவாலான நிலைக்குக் கொண்டு சென்றது மோடி அரசு. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக அரசின் கடன் தொகையைப் பற்றிப் பேசுவதற்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆதாரமற்ற அபத்தங்களை நாள்தோறும் கூறி, சர்ச்சைகளில் சிக்கி வருகிற அண்ணாமலை, ஊருக்கு உபதேசம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. தமிழக பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படுகிற ஆளுநர் ஆர்என் ரவி, வரலாற்றுத் திரிபு வாதங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளைப் பார்க்கிறபோது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய ஆளுநரா? அல்லது தமிழக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளரா? அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.” என்று அழகிரி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.