புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் ரயில்வேக்குச் சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும், அவர்களை ஜனவரி 9-ம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் சென்ற டிசம்பர் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது.
உத்தராகண்டில் ஹல்த்வானி நகரில் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் 4,335 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. மொத்தமாக 50 ஆயிரம் மக்கள் அங்கு வசிக்கின்றனர்.
ஆனால், இந்த நிலம் ரயில்வேவுக்குச் சொந்தமானது என்றும் 29 ஏக்கர் அளவில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தே மக்கள் தங்கள் வீடுகளை இங்குக் கட்டியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்குத் தொடர்பாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 2023 ஜனவரி 9-ம் தேதிக்குள் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், துணை ராணுவப் படையைப் பயன்படுத்தியும் அகற்றலாம் என்றும் கூறியது. இந்தத் தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதிக்கக் கோரி மக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. “50 ஆயிரம் மக்களை இரவோடு இரவாக அகற்ற முடியாது. இது மனிதாபிமானம் தொடர்புடைய விஷயம். துணை ராணுவப்படையைப் பயன்படுத்தி அம்மக்களை அகற்ற வேண்டும் என்று கூறுவது சரியல்ல. இவ்விவகாரத்தில் நடைமுறைக்கு ஏற்ற தீர்வு உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற அமர்வு தடைவிதித்தது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.