தள்ளிப்போகிறது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு! காரணத்தை ஏற்கமறுத்து நள்ளிரவில் போராடிய மக்கள்

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென பாதுகாப்பு காரணம் கருதி  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வாடிவாசலில் களம் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் வந்த நிலையில் போட்டி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
image
அப்போது அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி, தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைத்து மாற்று தேதியில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தினர். இதனை கேட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினரும், கிராம மக்களும் “குறிப்பிட்ட நாளில் போட்டி நடத்த வேண்டும்” என்று கூறி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு நள்ளிரவில் கந்தர்வக்கோட்டை செங்கிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகப்படியான வாடிவாசல் உள்ளது. அதேபோல் இங்கு தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில்தான் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அங்கேயே கொண்டாடப்பட வேண்டுமென்ற நோக்கத்தில், தூய அடைக்கல அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 2ம் தேதி நடத்த கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி  நடத்தும் விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல், மேடை அமைத்தல், தடுப்பு வேலிகள் – மாடுகள் வெளிவரும் இடத்தில் பாரிக்காடுகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முழு‌ வீச்சில் அனைவரும் செய்து வந்தனர்.
image
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முன்கூட்டியே அனுமதி கேட்கப்படாததால், அரசு அதற்கு சம்மதிக்காமல் போனது. ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால், ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விழா குழுவினர் அனுமதி கேட்கப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து இன்று (ஜன. 6ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டியை தச்சங்குறிச்சியில் நடத்த நேற்று காலை தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதனால் தச்சங்குறிச்சி மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
மேலும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் அங்கு முடிவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் தச்சங்குறிச்சிக்கு வந்து இறங்கியது.
image
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தனர். அதன்பின்னர் `பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை, வீரர்களுக்கான கொரோனா ஆர்டிபிசியல் சோதனை மேற்கொள்ளவில்லை’ – எனக்கூறி, இவை அனைத்தும் அரசின் விதிமுறைகளை மீறுவது போல் உள்ளது என்று கூறினர்.
மேலும் அவர்கள், “இந்த ஆண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, இங்கே நடத்தப்பட உள்ளது. அதை முறையாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு தடையின்றி பாதுகாப்பாக நடைபெறும். அதனால் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும்” என்று கூறி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைப்பதாக கூறி, பணி முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கின்றார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
image
இதனால் ஆத்திரமடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்களும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கீதா உள்ளிட்டோரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். `குறிப்பிட்ட நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. அரசாணை தாமதமாகவே வெளிவந்தது. அப்படி இருந்தும் முழுமையாக பணியை முடித்து உள்ளோம்.
ஏற்கனவே இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக இருந்த நிலையில், தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. தற்போது 6ம் தேதி நடத்திக் கொள்ள அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்து வைப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது ஜல்லிக்கட்டு போட்டியை இன்றே நடத்தியாக வேண்டும்’ என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
image
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நள்ளிரவில் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் அமர்ந்து, “ஜல்லிக்கட்டை குறிப்பிட நாளில் நடத்த வேண்டும்” என்று கூறி மறியலில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுபவர்களிடம் போலீசாரும் வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில் “பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடித்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். கிராம மக்களும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் எந்த தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்கிறீர்களோ அந்த தேதியில் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பணி முழுமையாக முடிவடையாததால் தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்படுகிறது” என அறிவித்துவிட்டு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.
image
பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இன்று ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால், வேறு எந்த தேதியிலும் நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம். குறிபிட்ட நாளில் இன்றே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்” என்று தெரிவித்து கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் நள்ளிரவு 1:40 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முழுமை பெறவில்லை என்று கூறி பாதுகாப்பு நலன் கருதி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தச்சங்குறிச்சி கிராம மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.