அகர்தலா: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
திரிபுராவில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைய உள்ளது. இதையொட்டி அம்மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தெற்கு திரிபுராவில் அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியை நீதிமன்ற வழக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சி தடுத்து வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அங்கு கோயில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 2024-ம்ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும்.
பிரதமர் மோடியின் கைகளில் நாடு பத்திரமாக உள்ளது. பிரதமர் மீது திரிபுரா மக்கள் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. திரிபுராவில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும்” என்றார்.