விமானத்தில் பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த நபர்! – காவல் நிலையத்தில் புகாரளித்த ஏர் இந்தியா

கடந்த நவம்பர் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது இரவு உணவு முடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடியே வந்த நபர் ஒருவர், முதிய பெண் ஒருவரின் இருக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த முதிய பெண் அதிர்ச்சியடைந்து, அங்கிருக்கும் பணியாளர்களிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்காமல் முதிய பெண்ணுக்கு மட்டும் இருக்கை மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த அந்த நபரின் மீது விமான நிலையத்திலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், டெல்லி வந்ததும் அவர் சாதாரணமாக வெளியேறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த முதியப் பெண், தன் மகளிடம் தெரிவித்திருக்கிறார். உடனே நடந்த சம்பவத்தை ட்விட்டரில் பதிவிட்ட அந்தப் பெண், மத்திய அமைச்சர்களையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, “இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இயக்குநரகத்துக்கு அறிக்கை வழங்க, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

ஏர் இந்தியா விமானம்

இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனம், ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “பாதிக்கப்பட்ட பெண் சட்ட அமலாக்கத்திடம் புகார் அளிக்கவில்லை. அதனால், இருவருக்குள்ளும் பேசி பிரச்னை சுமுகமானதாக கருதினோம். அதன் பிறகே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் ஏர் இந்தியா விமானத்தில் 10 நாள்கள் பயணம் செய்வதற்கு தடைவிதிக்கபட்டிருக்கிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.