10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சென்னையைத் தாண்டினால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்ற பிரச்னை ரொம்பக் காலமாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் பல முறை விளக்கம் அளித்தும் இன்னமும் 10 ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்துவருகின்றனர். இந்நிலையில் வங்கி அதிகாரிகளே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக அந்த அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

10 ரூபாய் நாணயங்கள்

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பல காலமாகவே மக்களிடம் பரவி வருகிறது. இதனால் பலரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துவருகின்றனர்.

இந்த நாணயங்களை வாங்க மறுத்தால் சட்டப்படி குற்றம் என்றும், சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய கடையில் பொருட்கள் வாங்குபவர்களிடம் பெற்ற 10 ரூபாய் நாணயங்களை டெபாசிட் செய்ய சென்ற நிலையில் அவற்றை வாங்க வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால் வங்கியின் உதவி மேலாளர், காசாளர் இருவரையும் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் நாணயம்

பாமர மக்கள்தான் அறியாமையில் இருக்கிறார்கள் என்றால் வங்கி அதிகாரிகளே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இனியேனும் 10 ரூபாய் நாணயங்களை மற்ற நாணயங்களைப் போல பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.