“அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு தரப்படும். வெற்றி பெறும் வீரர் மற்றும் காளைக்கு கார் பரிசளிக்கப்படும்” என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அவற்றில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் புகழ் பெற்றதாகும். அப்படிப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு இன்று நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழ்நாட்டிலிருந்து மட்டுமன்றி உலகெங்கும் இருந்து பலரும் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்துக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளின் தொடக்கமாக வாடி வாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மூகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதற்காக விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் 15-20 நாட்களுக்கு முன்பே அம்மனுக்கு காப்பு காட்டி விரதம் இருந்து பாரம்பரிய வழக்கப்படி முத்தாலாம்மனை வணங்கி ஜல்லிக்கட்டு பணிகளை தொடங்கியுள்ளனர். முத்தாலம்மனை கிராம மக்கள், விழாக்குழுவினர் வணங்கி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகளை மெற்கொண்டுள்ளனர். இந்த விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன், டிஐஜி பொன்னி, காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண அதிகளவில் பார்வையாளர்கள் வர உள்ளதால் கேலரிகளை அமைப்பது, குடிநீர் தொட்டி, கழிவறை வசதி உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் வாடிவாசலை ஒட்டி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு காளைகள் வெளியேறும் வகையில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்தல், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிற்கு நார்களை கொட்டி சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. அப்போது மதுரை அலங்காநல்லூரில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் காலதாமதம் ஆகாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே முழுமையாக செய்யப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு வழங்கப்படும். மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்படும். அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
பாரபட்சமின்றி காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM