டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட 250 வார்டுகளில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. 134 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இரண்டாம் இடத்தை பிடித்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
முதல்முறை ஆம் ஆத்மி
காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றது. 15 ஆண்டுகளில் முதல்முறை டெல்லி மாநகராட்சியை பாஜக கோட்டை விட்டது. முன்னதாக தொடர்ந்து இரண்டு முறை டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஆம் ஆத்மி அமர்ந்தது. இந்நிலையில் முதல்முறை டெல்லி மாநகராட்சியை தன்வசப்படுத்தி உள்ளது. இதையடுத்து மேயர் பதவிக்கான தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
டெல்லி மேயர் பதவி
டெல்லி மாநகராட்சி மேயர் பதவியை பொறுத்தவரை சுழற்சி முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஆண்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டு பொதுப் பிரிவை சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவர். மூன்றாவது ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எஞ்சிய இரண்டு ஆண்டுகளும் பொதுப் பிரிவில் இருந்து மேயர் தேர்வு செய்யப்படுவார்.
வேட்பாளர்கள் யார், யார்?
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு போட்டியாக ஷாலிமர் பாக் என்பவரை பாஜக நிறுத்தியுள்ளது. தங்களுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலிலும் சில அரசியல் கணக்குகளை போட்டு டெல்லி மேயர் நாற்காலியை பிடிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில் ஆலே முகமது இக்பால், பாஜக சார்பில் கமால் பாக்ரி உள்ளிட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவையில் பெரும் சலசலப்பு
மேயர் தேர்தலை நடத்துவதற்கு முகேஷ் கோயல் என்பவரை பொறுப்பு அதிகாரியாக நிறுத்த டெல்லி துணை நிலை ஆளுநருக்கு ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவரோ பாஜகவை சேர்ந்த சத்ய சர்மாவை நியமித்து அதிரடி காட்டினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மேயர் தேர்தலில் குளறுபடி செய்யும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்பட்டுள்ளார்.
வாக்குப்பதிவு தாமதம்
இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி கூட்டம் கூடியதும் உறுப்பினர்களில் யார் முதலில் பதவியேற்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி, பாஜக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருதரப்பிற்கும் இடையில் தள்ளுமுள்ளு உண்டானது. மாறி, மாறி கோஷங்கள் எழுப்பி பதற்றத்தை ஏற்படுத்தினர். இதனால் மேயர் பதவிக்கான வாக்குப்பதிவு நடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.