பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கானின் `பதான்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென்ற முழுக்கத்தை (பாய்காட் பதான்) பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகள் தீவிரமாக முன்னெடுத்திருக்கின்றன.
பதான் படத்துக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பக் காரணம், `இந்தப் படத்தின் ஒரு பாடலில் தீபிகா படுகோன் காவி நிற ஆடையில் கவர்ச்சிகரமான நடனம் ஆடுவது இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக இருக்கிறது’ என இந்துத்துவ அமைப்புகள் கூறுவதுதான்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், “சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம் (medium). ஆனால் பா.ஜ.க அரசு, சினிமாவை அரசியல் சித்தாந்தத்துக்கான கருவியாக மாற்றியிருக்கிறது. பயத்தையும், அவநம்பிக்கையையும் பரப்பிவரும் பா.ஜ.க-வின் வாளால் சினிமா உலகம் துண்டாடப்படுகிறது. அர்த்தமுள்ள சினிமா கொண்டுவரும் நம்பிக்கையையும், மாற்றத்தையும் பா.ஜ.க விரும்பவில்லை” என இந்தியில் பதிவிட்டிருக்கிறார்.