சென்னை மாநகராட்சியில் 4 பேருக்கு வேலைக்கான போலியான பணி ஆணை வழங்கி ரூ 17 லட்சம் மோசடி செய்த ஊர்காவல்படையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 36), இவர் திண்டுக்கல்லில் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் சென்னை மாநகராட்சியில் அரசு பணி வாங்கி தருவதாக கூறி கடந்த 2019, 20, 21 ஆகிய வருடங்களில், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த சங்கப்பனிடம் ரூ 1லட்சம், ஆண்டவரிடம் ரூ 7 லட்சம், கவிரத்னாவிடம் ரூ. 6 லட்சம், சகாயராஜிடம் ரூ.3 லட்சம் என மொத்தமாக ரூ.17 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து கடந்த வருடம் நான்கு பேருக்கும் சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர், அலுவலக பணியாளர் பணிக்கான அரசு ஆணையை வழங்கி உள்ளார். அதனைத்தொடர்ந்து நான்கு பேரும் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது, இது போலி பணியானை என்பது தெரியவந்தது.
பின்னர் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கடந்த வருடம் 8ஆவது மாதம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையை அடுத்து போலீசார் தேடி வருவதை அறிந்த விஜயகுமார் தலைமறைவாகினார். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை இன்று தாடிக்கொம்பு அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விஜயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM