ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கிய நபர், தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் போதை ஆசாமி ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் “வெல்ஸ் பேர்கோ ” என்ற பன்னாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. “ஷங்கர் மிஸ்ராவின் செயல் அநாகரீகமானது, இது தங்களின் நிறுவனத்திற்கு பெரும் அவமானம்” என கருதி ஷங்கர் மிஸ்ராவை இன்று பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கிடையே ஷங்கர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.