ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இப்போதே வேகம் பிடித்துள்ளன. இதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு அதற்கான இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
’ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காளைக்கான உரிமையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.
காளை அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM