புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் செயல்பட்ட டி.ஆர்.எப் என்ற அமைப்புக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததால் அந்த அமைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டி.ஆர்.எஃப்) என்ற அமைப்பினர், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உளவுத் தகவல்கள் உறுதி செய்தன. அதையடுத்து அந்த அமைப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த டி.ஆர்.எஃப் என்ற அமைப்பு, இளைஞர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தீவிரவாத கருத்துகளை போதித்து வந்தனர். இந்த அமைப்பினர் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்பினிருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டக் கூடிய வேலைகளில் ஈடுபட்டனர். தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால், உபா சட்ட விதிகளின்படி, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. டி.ஆர்.எப் அமைப்பின் தளபதியாக செயல்பட்ட ஷேக் சஜாத் குல் என்பவனை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் படி தீவிரவாதியாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.