கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடைக்கால சீசனில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிக அதிகமாக காணப்படும். இதுபோல விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களிலும் கூட்டம் அதிகம் காணப்படும். இந்தநேரங்களில் இங்கு வியாபாரமும் களைகட்டும். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் களைகட்டி வருவதால் கன்னியாகுமரியில் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.
அதுபோல இன்றும் அதிகாலை முதல் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் அதிகாலை முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டுகளித்தனர். ெதாடர்ந்து கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து திரும்பினர். இதேபோல திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி, கடற்கரை சாலை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.