ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி, இன்று (06.01.2023) டெல்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு:
1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல்
2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவுதல்
3. கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்
4. ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்
5. தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவுதல்
6. உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பு தொடர வழிவகை காணுதல்
7. மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபணை
8. தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி மருந்து கூடுதலாக வழங்கக் கோருதல்
9. தமிழ்நாட்டிற்கு பதினைந்தாவது நிதி ஆணையம் 2022-23 நிதியாண்டிற்கு ஒப்புதல் அளித்த நிதியை உடனடியாக விடுவிக்கக் கோருதல்
10. அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலத்திற்கு ஒப்படைக்க கோருதல்
11. தமிழ்நாட்டிற்கு 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கக் கோருதல்

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு இல்லம் முதன்மை செயலாளர், உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.