ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்றுவதற்கான  சாத்தியமான வழிமுறைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்களுக்கும்  இடையில் நேற்று (05.01 2023) இடம்பெற்ற சந்திப்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் நல்லெண்ண செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
 
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை  முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதல் கட்டமாக ஜனாதிபதியின்  நிறைவேற்று அதிகாரத்தின் மூலமும், நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஊடாகவும் காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை  மாகாண சபைகளுக்கு மீளக் கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த கலந்துரையாடல்களில்,தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என்று சுமார் 35 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சு – 06.01.2023

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.