நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தி.மு.க கட்சி அலுவலகத்தில், தி.மு.கவின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழியின் 55 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, ஏழை, எளிய மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில மகளிர் தொண்டரணி ராணி மற்றும் திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஏழை எளிய பெண்களுக்கு குக்கர், அரிசி, மளிகை பொருட்கள் என நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ரியா, “ஆயிரம் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தாலும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருநங்கையான எனக்கு கட்சி மற்றும் நல வாரிய உறுப்பினர் பொறுப்பை தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். திருநங்கைகள் நல வாரியம் மூலம் 50,000 ரூபாய் வரை இலவசமாக திருநங்கைகள் தொழில் துவங்க வழங்கப்படுகிறது.
அதேபோல், வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் திருநங்கைகளுக்கான கொள்கை வரைவு சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. விரைவில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சி எடுக்கப்படுவது, எங்க சமூகத்துக்கு ஒரு புதிய விடியல் பிறக்கப்போவதாக நம்பிக்கை கொடுக்கிறது. இதன் மூலம் எங்கள் வாழ்கைத்தரம் மேம்படும், எங்கள் மீதான சமூகத்தின் இழிவான பார்வை மறைந்து, எங்களுக்கும் சமமான மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.