கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி இரு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானையை, கடந்த மாதம் 8ம் தேதி புளியம்பாறை நீடில் ராக் வனப்பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து, காங்கிரஸ் மட்டம் பீட் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கக்கநல்லா பகுதியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி நகர் பகுதியில் அரிசி ராஜா நடமாடியுள்ளது. பத்தேரி நகரில் இந்த யானை சாலையில் நடமாடிய நபர் ஒருவரை துதிக்கையால் அசால்டாக தூக்கி சாலையோரம் வீசி சென்றது. இதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அரிசி ராஜா யானை நடமாட்டம் காரணமாக சுல்தான் பத்தேரி சுற்றுவட்டத்திற்கு உட்பட்ட 10 டிவிசன் பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாட 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.