சங்பரிவாரின் ஊதுகுழல்… ஆளுநர் ஆர்.என்.ரவியை விளாசிய வைகோ!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நாகர்கோவில் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கொள்கைக்காக, கோரிக்கைக்காக சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நிலையில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற ‘தமிழ்நாடு’ என்று 3 முறை கூறி சூட்டப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும். தவறாக பேசிவிட்டேன் என்று அவர் கூற வேண்டும். ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆளுநரை இயக்குவது சங் பரிவார்; அவர்களின் ஊது குழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.

அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு “நல்லா இருக்கு” என கூறி சென்றார் வைகோ.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கும் கருத்துகள் விஷமத்தனமானவை.

‘தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை. அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கவில்லை. மாறாக, எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா?

1967 இல் பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனவுடன், 1967 ஜூலை 18 ஆம் தேதி, சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினார். இச்சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் இசைவினைப் பெற்று, 1969 ஜனவரி 14 பொங்கல் திருநாளில் தமிழ்நாடு எனும் பெயர் சூட்டப்பெற்று, நடைமுறைக்கு வந்தது” என்று வைகோ தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.