புதுடெல்லி: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 44 பேர் குறித்து இன்னும் 3 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு முடிவு எடுத்து பெயர்களை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் மீது ஒன்றிய அரசு நியமனங்களை மேற்கொள்ளும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்கள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு மனு மீது விசாரணை நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ‘‘சுமார் 104 கொலீஜியம் பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அதில் 44 பெயர்கள் மீது மூன்று தினங்களுக்குள் முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விவகாரத்தில் உரிய கால நேரம் சரியாக பின்பற்றப்படும்’’ என உறுதியளித்தார். தலைமை வழக்கறிஞர் அதற்கான உரிய தகவல்களை கேட்டு தருவதாகவும், அதனால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.