அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வரும் 17ம் தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்எல்ஏ, மற்றும் அரசு அலுவலர்கள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வரும் 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறந்த காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்குவார். பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு, மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். மாடு பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழா நடக்கும். தகுதி சான்றுடன் ஆன்லைன் பதிவு பெற்ற காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம்.இவ்வாறு தெரிவித்தார்.
* தச்சன்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு
தமிழகத்தின் இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் நடைபெற இருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள வாடிவாசல் மற்றும் திடல் பகுதிகளில் அரசின் அறிவுறுத்தல்படி போதிய பாதுகாப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்திவைப்பதாக கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே, ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் என ஆர்டிஓ முருகேசன் அறிவித்து உள்ளார். இதை கேட்ட பொதுமக்கள், விழா குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.