பெங்களூரு:
குறைந்த வட்டிக்கு கடன்
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா, கர்நாடகம்-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. அத்திப்பள்ளி அருகே உள்ள சித்தாபுரம் பகுதியில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்தில் நல்லக்கனி (வயது 53) என்பவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதே அலுவலகத்தில் சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார்.
இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் சிலர் வருவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருநெல்வேலியை சேர்ந்தவர்கள்
இதையடுத்து, அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கள்ளநோட்டுகளுடன் இருந்த 3 பேரை கைது செய்தார்கள். அதில் அவர்கள் 3 பேரும் தமிழ்நாடு திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் என்றும், ஆடிட்டர், பைனான்சியர் என்று கூறி மக்களை ஏமாற்ற வந்தவர்கள் எனத் தெரியவந்தது. மேலும் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக பெங்களூருவுக்கு வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த நல்லக்கனி (வயது 55), சுப்பிரமணியன் (60), அஜய்சிங் (48) என்றும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கும்பலின் தலைவன்
நல்லக்கனி, கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். இவரிடம் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நோட்டுகளை பெங்களூருவில் புழக்கத்தில் விட முடிவு செய்த அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அத்திப்பள்ளியில் அலுவலகம் அமைத்து செயல்பட தொடங்கி உள்ளார்.
மேலும் கள்ள நோட்டுக்களை பெங்களூருவுக்குள் கொண்டு வந்து, அவற்றை கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்திருந்தார்.
புழக்கத்தில் விட திட்டம்
ஏற்கனவே கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக அத்திப்பள்ளியில் அலுவலகம் அமைத்திருந்தனர். அப்பகுதி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், நகைக்கடன் கொடுப்பதன் மூலமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு, கடன் வசூலிக்கும் போது, அவர்களிடம் இருந்து நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 3 பேரும் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக தாங்கள் அச்சடித்து வைத்திருந்த ரூ.1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்திற்கு, 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் காரில் புறப்பட்டுள்ளனர். அத்திப்பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையின் போது போலீசாரிடம் சிக்கி இருந்தனர்.
ரூ.1.28 கோடி பறிமுதல்
இதையடுத்து, ரூ.1 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்திற்கு 2 ஆயிரம் முக மதிப்புடைய 6,203 கள்ளநோட்டுகள், ரூ.87 ஆயிரத்துக்கு 500 முகமதிப்புடைய 174 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடமும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், பிரிண்டர்களின் மொத்த மதிப்பு ரூ.1.28 கோடி ஆகும். அவை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா பார்வையிட்டார். ஓசூர் அருகே மாநில எல்லையில் காருடன் கள்ளநோட்டுகள் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.