புதுடில்லி, ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,உறுப்பினர்களின் மோதலை அடுத்து, மேயர் தேர்தல் நடைபெறாமலேயே புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த புதுடில்லி மாநகராட்சி தேர்தலில், 250 வார்டுகளில், 134 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது.
மாநகராட்சி தேர்தலுக்குப் பின், முதன்முறையாக நேற்று கூடிய மாமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பதவியேற்ற பின், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, துணை நிலை கவர்னர் பரிந்துரையின்படி, ‘ஆல்டர்மேன்’ எனப்படும் 10 நியமன உறுப்பினர்கள் பதவியேற்க அழைக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் முதலில் பதவியேற்க வேண்டும் எனக்கூறி, கூச்சல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிலுக்கு பா.ஜ., உறுப்பினர்களும் கூச்சலிட, இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால், அங்கு பதற்றம் நிலவியது.
பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த, தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட அதிகாரி முன்னிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களமானது.
இதையடுத்து, மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தாமலேயே மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்