ஜல்பைகுரி,:மேற்கு வங்கத்தில் ஆம்புலன்சிற்கு அதிக கட்டணம் கேட்டதால் தாயின் உடலை, அவரது மகன் 40 கி.மீ., வரை சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜல்பைகுரி மாவட்டத்தின் கிராந்தி பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத்.
சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட தன், 72 வயதான தாயை, ஜல்பைகுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து தாயின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர், 900 ரூபாய் என்ற நிர்ணய கட்டணத்திற்கு பதிலாக, 3,௦௦௦ ரூபாய் கேட்டுள்ளார்.
ராம் பிரசாதிடம் இந்தளவு பணம் இல்லாததால், தன் தாயின் உடலை உறவினர்களின் உதவியுடன் 40 கி.மீ., வரை தோளில் சுமந்து சென்றார்.
இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்யாண் கூறுகையில், ”இந்த சம்பவம் துரதிருஷ்ட்வசமானது. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த போதுமான பணம் இல்லையென ராம் பிரசாத் தெரிவித்திருந்தால், நாங்களே வாகனம் ஏற்பாடு செய்திருப்போம்.
”அதிக கட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்