புதுடெல்லி: நேற்று கூடிய டெல்லி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில், ஆம் ஆத்மி மற்றும் பாஜ கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதையடுத்து, மேயர், துணைமேயர் தேர்தல் நடக்கவில்லை. டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4ம் தேதி நடந்த தேர்தலில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜவின் 15 ஆண்டுகால தொடர் ஆட்சிக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது. பாஜ 104 வார்டுகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி(நேற்று) மேயர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று துவங்கியது. துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்த பாஜ கவுன்சிலர் சத்ய சர்மா அவையின் தலைவராக பதவி பிரமாணம் எடுத்துக்ெகாண்டார். அதன்பின், கவர்னரின் பரிந்துரையின் பேரில் 10 நியமன உறுப்பினர்கள்(ஆல்டர்மேன்) பதவி பிரமாணம் எடுக்க துவங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். பின்னர் அவை தலைவரின் மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பதிலுக்கு பாஜ கவுன்சிலர்களும் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இரு கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இதில், கவுன்சிலர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடக்காமல் மாநகராட்சி மன்றம் ஒத்திவைக்கப்பட்டது.