சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக -அதிமுக இடையேயான கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு சார்பாக தமிழ்த்தாய் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று கலைத் துறையினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருதுகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டு கலைத்துறையினருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்தபோது, நமது சித்தாந்தங்களுக்கு எதிராக பேசியவர்களுக்கு ஏன் விருது வழங்குகிறீர்கள்? என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கலைத்துறையினருக்கு வழங்கப்படும் விருது என்பது அவர்களின் திறமையைப் பார்த்துவழங்கப்படுவது எனக் கூறி, விருது பெற்றவர்களை வீடுகளுக்குச் சென்று சந்தித்து வருமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டேன். கலைஞர்கள் அரசியலைக் கடந்து நிற்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பு: பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் ட்விட் செய்திருக்கிறார். விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீஸாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலரிடமும் நடவடிக்கை வேண்டாம் என கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் எங்கும் நடக்காது.
பாதிக்கப்பட்ட பெண் காவலரிடமே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடிதம் வாங்கியது குறித்து திருமாவளவன், முதல்வரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். பெண் காவலருக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கான நிலை குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது பாஜக – அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன்தான் கூட்டணி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழக பாஜக மிகவும் தெளிவாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.
தமிழகத்தில் மோடி போட்டியா?: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா? என்பது குறித்து தெரியவில்லை. தொண்டர்கள் அனைவருக்கும் பிரதமர் தனது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவருமே பிரதமர் மோடியைப் போன்றவர்கள்; அவரது ஆசியைப் பெற்றவர்கள்தான். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மைல்கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.