மும்பை, ஐேராப்பிய நாடான பிரிட்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் இருந்த பயணிக்கு, நடுவானில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடன் பயணித்த டாக்டர், நீண்ட நேரம் போராடி அவரது உயிரை காப்பாற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் வெமலா. டாக்டரான இவர், பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
அறிவிப்பு
சமீபத்தில், தன் தாயைப்பார்ப்பதற்காக ‘ஏர் இந்தியா’ விமானத்தில் பிரிட்டனில் இருந்து பெங்களூருக்கு பயணித்தார்.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த, 43 வயது பயணி, நெஞ்சு வலி காரணமாக மயங்கினார்.
இதையறிந்த விமான ஊழியர்கள், டாக்டர்கள் யாராவது இருந்தால் உதவும்படி அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து டாக்டர் விஸ்வராஜ் வெமலா, அந்த பயணியிடம் சென்று, அவரது நாடித் துடிப்பை பரிசோதித்து, முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தின் மருந்து பெட்டியில், செயற்கை சுவாசத்துக்கு பயன்படுத்தப்படும் கருவி, ஆக்சிஜன் ஆகியவைஇருந்தன. இதை வைத்து அந்த பயணிக்கு விஸ்வராஜ் வெமலா சிகிச்சை அளித்தார்.
சில நிமிட போராட்டங்களுக்குப் பின், அந்த பயணி கண் விழித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நினைவிழந்தார்.
விமானம் தரையிறக்கம்
இதையடுத்து சக பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் உதவியுடன், ஐந்து மணி நேரத்துக்கு மேலாக போராடிய விஸ்வராஜ் வெமலா, தொடர்ந்து சிகிச்சை அளித்தார்.
இவரது முயற்சியின் பலனாக அந்த பயணி கண் விழித்தார். இதற்குள் விமானம் மும்பை வான் பகுதிக்கு வந்ததால், அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினரிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது அந்த பயணி உடல் நலம் தேறி நன்றாக இருப்பதாகவும், தன் உயிரை காப்பாற்றிய விஸ்ராஜ் வெமலாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வராஜ் பணியாற்றும்பர்மிங்காம் பல்கலை மருத்துவமனையும் இந்த தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்