சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், தன்னுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.
நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது: பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றோம். மதச்சார்பான அரசியலைத் தடுக்க வேண்டும்.
கட்சியினர் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். அதேநேரம், தலைமையின் கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். மக்கள் நலனுக்காகப் பேசுபவர்கள் பின்னால்தான் மக்கள் இருப்பார்கள். அந்த நலன்களை நான் தேடி வருகிறேன்.
கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும். திறம்பட உரையாற்றுபவர்கள் தங்களுக்குக் கீழ் 10 பேரைத் தயார் செய்ய வேண்டும். கட்சியினரின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஆனால் பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை.
சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டு உள்ளோம். ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டத்தை நான் மறக்கவில்லை. மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அவ்வாறு நடத்த முடியாது. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஜல்லிக்கட்டின் அருமை புரிய வேண்டும். அதற்காகவே சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புகிறோம். இதுதொடர்பாக அனுமதி பெறுவதற்கான ஆலோசனை நடைபெறுகிறது. விரைவில் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.