'ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது?’- திருமாவளவன் பேச்சு

“சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகவும் சினிமாவை மாற்றலாம்” என ‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார்.
‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “இரும்பன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் திரைப்பட துறையின் மூலம் அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும். எந்த உலகத்திலும் இப்படி இல்லை. திரைப்பட துறையில் முதல்வரை தேடுவதும் இங்கு உண்டு. சினிமாவுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் பங்கு உண்டு. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வர்களாகவும், விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவும் சினிமாவில் இருந்து வந்துள்ளார்.
தமிழக அரசியலில் 50 ஆண்டுகள் திரைப்பட துறை பங்கு உண்டு. மக்கள் பலவீனமானவர்களா? திரைத்துறை பலமானதா? என்று பார்த்தால் திரைத்துறையில் இருந்தவர்கள் பலமானவர்களாக இருந்துள்ளனர். சினிமாவுக்கு திராவிட அரசியலை மக்களின் கொண்டு சேர்த்ததில் பங்கு உண்டு. சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்து. திரையில் எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்கவில்லை. அரசியல் பேசினார். பெரியாரின், அண்ணாவின் கொள்கைகளை பேசினார். சமூக நீதி அரசியல், தொழிலாளிகள் அரசியலை பேசினார்.

image
சினிமாவை வருமானத்துக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. கொள்கைகளுக்காவும் பயன்படுத்தினார்கள்‌. சமூக பிரச்சினைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது. சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் விழிப்புணர்வுடன் படங்களை வெளியிட்டது தமிழ்நாடு தான். தமிழகம் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கிறது. திரைத்துறையிலும் முன்னேற்றம் கொண்டுள்ளது தமிழில் தான். எம்ஜிஆர் தன் அணுகுமுறைகள் மூலம் மக்களை ஈர்த்தார். எம்ஜிரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட காரணம், அவர் மக்களை நேசித்தார். மக்களிடம் அவர் காட்டிய அணுகுமுறையும் தான். அவரது படத்தில் மக்கள் உள்ளதை தொடும் காட்சிகள் இருக்கும். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தற்போது மக்களிடம் எம்ஜிஆர் மயக்கம் இருக்கிறது.

சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகவும் சினிமாவை மாற்றலாம். சினிமா மிகப்பெரிய ஆயுதம்‌. மக்களை சென்றடையும் ஆயுதம். சினிமாவை கலையாக மட்டும் ரசிக்க வேண்டும் என்பார்கள். அப்படி இல்லாமல் சினிமா சமூக மாற்றத்துக்கான கருவியாக இருக்க வேண்டும். திரை உலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது.
கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது.

image
முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொழில் போட்டி மட்டுமல்ல. தொழிலாளிகளின் உரிமைகளையும் பறிப்பதாகும்.  

யாருக்கும் எதிராக பேசவில்லை. எனக்கு சமூக பொறுப்பும் உள்ளது. எம்ஜிஆர் வசனம் எழுத மாட்டார், பாடல் எழுத மாட்டார், இசை அமைக்க மாட்டார்‌. ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார். அதேபோல தேர்ந்து நடிக்க வேண்டும். மக்களோடு இயங்க வேண்டும். ஜுனியர் எம்ஜிஆர் அப்படி பழக வேண்டும். சமூக நீதி பேசுவோர் கையில், தமிழ் திரைத்துறை இருக்க வேண்டும்; இயக்க வேண்டும்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.