திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கேரளாவில் பெரும்பாலான கோயில்களில் இந்த வெடி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்த திறன் கொண்ட வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது. சபரிமலையில் மாளிகைப்புரம் பகுதியிலும், நடைப்பந்தல் அருகேயும் வெடி வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2ம்தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் வெடிபொருள் நிரப்பும்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிபொருளில் தீப்பிடித்தது. இதில் ஜெயக்குமார் (47), அமல் (28) மற்றும் ராஜேஷ் (35) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.