மக்களை ஒன்றிணைக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இந்த யாத்திரையில் கனிமொழி, திருமாவளவன், ஃபரூக் அப்துல்லா போன்ற அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டார். அதன்பிறகு ராகுல் காந்தியுடன் தனி நேர்காணல் ஒன்றையும் கமல்ஹாசன் நடத்தினர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கலந்துகொண்டோருக்கான பாராட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது யாத்திரையில் பங்கேற்றோருக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டிய கமல்ஹாசன், அடுத்தடுத்து பெரிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய கமல்ஹாசன், “மதத்தை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்போதும் நான் எதிர்த்து வந்திருக்கிறேன். மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது குழந்தைகளைப் போருக்குப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது. அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல்கொடுத்தேன், அன்றைய பிரதமரைச் சந்தித்து நீதிக்காக முறையிட்டேன். இன்று இந்தியாவின் மாண்புகள் தாக்குதலுக்கு உள்ளானபோது `பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றேன்.
என்றுமே, நீதிக்காக நமது கருத்து தொடர்ந்து ஒலிக்கும். இதுவே நாம் முன்வைக்கும் மய்யவாதம். ஊர்தோறும் கொடிகள் ஏற்றுவோம், ஒவ்வொருவரும் தலைமைப் பண்புகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்தவேண்டும்” என்று கூறினார்.
மேலும், பல்வேறு போராட்டங்கள், உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு உருவான `தமிழ்நாடு’ என்ற பெயரை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு பேரவை – தமிழ்நாடு அமைப்புடன் இணைந்து சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தமிழக அரசிடம் அனுமதி கோர உள்ளதாகவும், இது கிராமியக் கலாசாரத்தை நகரத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.