தமிழ்நாடு கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 11 தமிழர்கள் கேரளாவை சேர்ந்த ஏஜென்ட் முஹம்மது சம்சுதீன் என்றபவரிடம் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல தொடர்பு கொண்டனர். அவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி அவர்களை தமிழகத்தில் இருந்து மும்பைக்கு வரவழைத்தார். மும்பை குர்லா ரயில் நிலையத்திற்கு வந்த 11 பேரையும், ஏஜென்ட் குர்லா டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து அழைத்து சென்றார். அவர்களை மும்பை செம்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்தார். பின்னர் அவர்களிடம் டிக்கெட் எடுக்கவேண்டும் என்று கூறி தலா 50 ஆயிரம் ரூபாய், பாஸ்போர்ட் வாங்கிச் சென்றார்.
அடுத்தநாள் விசா அடித்த பாஸ்போர்ட், விமான டிக்கெட் கொடுத்து மும்பை இண்டர்நேஷனல் விமான நிலையம் அழைத்து சென்றார் அந்த ஏஜென்ட். அதன் பின்னர், 11 பேரையும் விமான நிலையத்தில் உள்ளே விட்டு விட்டு ஏஜென்ட் மொபைலை ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். உள்ளே சென்ற 11 பேர்கள் போர்டிங் பாஸ் எடுக்க நின்ற போது அதிகாரிகள், 11 பேர்களிடம் இருந்த டிக்கெட், விசா போலி என்று தெரிய வந்தது. உடனே விமான நிலைய அதிகாரிகள் 11 தமிழர்களை எச்சரித்து வெளியே அனுப்பி விட்டனர். ஏமாந்து போன 11 தமிழர்கள் ஒன்றும் புரியாமல் திரும்ப மும்பை செம்பூரில் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் வந்தனர்.
அவர்கள் அங்கு தங்களை அழைத்து வந்த ஏஜென்டை தேடினர். எங்கு செல்வது என்று ஒன்றும் புரியாமல் திணறிய 11 தமிழர்களுக்கு செம்பூர் சித்ரா ஹோட்டல் உரிமையாளர் மோகன் என்பவர் உதவி செய்தார். மோகன் சயான் கோலிவாடாவை சேர்ந்த சுதாகர் என்பவரை தொடர்பு கொண்டார். சுதாகர் உடனே வந்து 11 பேரையும் அழைத்துக்கொண்டு செம்பூர் பகுதி துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் ராஜபுத்தை சந்தித்து நடந்த அனைத்தும் தெரிவித்தார். உடனே அவர் செம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இது குறித்து விசாரிக்கும்படிகேட்டுக்கொண்டார். செம்பூர் இன்ஸ்பெக்டர் சுனில் ஜாதவ் மற்றும் அதிகாரிகள் உடனே விரைந்து செயல்பட்டு குற்றவாளி சம்சுதீனை 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மேலும் 50 தமிழர்களின் பாஸ்போர்ட், போலி விசாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீஸார் அவர் மீது, வழக்கு பதிவு செய்து அவரை குர்லா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.