புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு, ஸ்டான் போர்டு, யேல் உள்ளிட்ட புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் அனுமதிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இது தொடர்பான வரைவு மசோதாவை மக்களின் கருத்துக்கேட்புக்காக பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்துக் கேட்புக்குப் பிறகு இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் கூகுள், மைக்ரோசாஃப்ட் என சர்வதேச நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கு சென்றிருந்தாலும், பெரும்பாலான மாணவர்களின் போட்டித்திறன் சர்வதேச சூழலில் பின்தங்கி இருக்கிறது.
2022-ம் ஆண்டின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் பட்டியலிடப்பட்ட 133 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மாண வர்களின் திறனை சர்வதேச தரத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டமைப்பு வைத்து இந்திய மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. மத்திய அரசின் தற்போதைய முடிவு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை திறக்க வழி செய்யும். சர்வதேச தரத்தில் கல்வி பெற இந்திய மாணவர்கள் பெரும் தொகை செலவழித்து வெளிநாடு செல்கின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகள் இந்தியாவில் திறக்கப்பட்டால், குறைந்த செலவில் மாணவர் களுக்கு தர மான கல்வி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.