சென்னை: தமிழகத்தில் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட விளக்கம்:
சிறு கனிம விதிகளில் பேரவையில் அறிவித்தபடி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் குவாரிப் பணிகளுக்கான தடை தற்போதும் நீடிக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் பொருள், சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் ஆகும். காப்புக் காடுகள் அல்ல.
எனவே, கடந்த டிச. 14-ம் தேதி வெளியான திருத்தம் மூலம், காப்புக் காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவித குவாரிப் பணி அல்லது சுரங்கப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன், குத்தகை உரிமம் வழங்கப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த குவாரிகளும் செயல்படலாம்.
உச்ச நீதிமன்றம், வனத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களில் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களுக்கு மட்டுமே இடைவெளி தேவை என்று குறிப்பிட்டுள்ளன. காப்புக் காடுகள் குறித்து தெரிவிக்கவில்லை. எனினும், 2021 நவ. 3-ம் தேதிக்கு முன்பிருந்த காப்புக் காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளி தற்போதும் பின்பற்றப்படுகிறது.