"அண்ணாமலைக்கு பதிலாக ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்"- எம்பி திருநாவுக்கரசர்

“ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அண்ணாமலைக்கு பதிலாக அவரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்” என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஒன்றிய அரசின் திட்டத்திற்கு அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டங்களில் நிலை குறித்தும் ஒன்றிய அரசின் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.
image
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “மாவட்டத்தில் அனைத்து துறைகளின் கீழ் இயங்கி வரும் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை குறித்து கேட்டறியப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திட்டங்கள் முடிப்பதற்கு ஏதாவது கூடுதல் நிதி தேவையா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது. அங்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதனை நானும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையும் நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கேட்டறிந்தோம். அவர்கள் தங்களுக்குள் எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தனர்.
image
இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுகளை கலந்த விஷமிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை இது போன்ற ஜாதி மோதல்கள் எங்கேயும் கிடையாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சாதி கட்சித் தலைவராக இருப்பதை விடுத்து அனைவருக்கும் பொதுவான கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை நான் அவரிடமே தெரிவித்துள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை அதிலிருந்து நீக்கிவிட்டு, அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக அவரை நியமிக்கலாம். ஏனெனில் அவருடைய கருத்தும் பேச்சும் அவ்வாறு தான் உள்ளது. அதிமுகவை பாஜக ஏதோ செய்ய நினைக்கிறது. இருப்பினும் அதிமுக குறித்த சர்ச்சை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தெளிவு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
image
தனி தமிழ்நாடு கோரிக்கை என்பது தற்போது தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் எழுப்பவில்லை. அண்ணா எழுப்பினார். பின்னர் அவரும் தனது நிலையை மாற்றிக்கொண்டார். அதற்குப் பிறகு எந்த அரசியல் கட்சித் தலைவரும் தனி தமிழ்நாடு என்று கோரிக்கையை எழுப்பவில்லை.
ஆதார் கார்டை போன்று தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தனி கார்டு ஒன்றை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நன்மை ஏற்படும் அல்லது அரசு நலத்திட்டங்கள் விரைவாக கிடைக்கும் என்றால், இதில் தவறு ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.