நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பழுதடைந்த கிராம சாலைகளை உடனே சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர். கொல்லிமலை, சேலூர் நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர் முடிபட்டிவரை உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் சமைத்து உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சாலையை அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் உடனே சாலையை சீரமைக்க கேட்டு கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கொல்லிமலை வட்டம், சேலூர் நாடு, ஊர் முடிபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருப்பது செம்மேடு, மெண்டலப்பாடி சாலையை இணைக்க கூடிய வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை இருக்க கூடிய கிராம பஞ்சாயத்து சாலையாகும். ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை செப்பனிப்படவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.