இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் நகரமான ஜோஷிமத், கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் உத்திராகண்ட் ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக “புதைந்து கொண்டிருக்கிறது”. வீடுகள் மற்றும் கட்டமைப்புகளின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுகின்றன. ஜோஷிமத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களை உண்டாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து பூமியில் தரைமட்டமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜோஷிமத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஜோஷிமத் நகரை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ஜோஷிமத் பூமியில் புதைந்து பேரழிவு ஏற்படக் கூடும் என்பதற்கான எச்சரிக்கைகள் பல தசாப்தங்களாக ஒலித்து வருகின்றன.
உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் தரைமட்டமாவது ஏன்
ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மற்றும் பழங்கால நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜோஷிமத் 1976 முதல் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக உள்ளது.
ஜோஷிமத் பூமிக்கு அடியில் சில அங்குலங்கள் மூழ்கியதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்புதான். நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளின் மீது நகரம் அமைந்துள்ளதால், அந்த நிலம் குறைந்த அளவிலான் தாங்கும் திறன் கொண்டது. அதிக அளவு கட்டுமானம் மற்றும் மக்கள் தொகையை அதனால் தாங்க முடியாது.
நீர்மின் திட்டங்கள் போன்ற பல மிகப்பெரிய திட்டங்களின் கட்டுமானப் பணிகளாலும், தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கம் மற்றும் அதிகப்படியான மக்கள்தொகை காரணமாகவும் ஜோஷிமத் நிலம் நிலையற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகை மட்டுமின்றி, விஷ்ணுபிரயாகில் இருந்து ஓடும் நீரோடைகள் காரணமாக ஜோஷிமத்தில் உள்ள பாறைகள் அரிப்பதால், நகரத்தில் பாறைகள் சிதறி, தளர்வான மண், பழைய நிலச்சரிவு இடிபாடுகளுடன் இணைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜோஷிமத் நகரம் கட்டப்பட்டிருக்கும் மண் குறைந்த தாங்கும் திறன் கொண்டது. குறிப்பாக அதிகப்படியான கட்டுமானத்திற்குப் பிறகு அதன் உறுதித் தன்மை மிகவும் குறைந்துள்ளது.
அரசாங்கம் நிலைமையைக் கணக்கிட்ட பிறகு, ஜோஷிமத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் தாமி நிறுத்திவிடுவார் என்றும், குடியிருப்பாளர்கள் நிலையான, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை உத்தராகண்ட் தொடர்ந்து சந்தித்து வருகிறது. பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை உத்தராகண்ட் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த 1970ம் ஆண்டில் மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின.
கடந்த 1991ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998ம் ஆண்டு மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999ஆம் ஆண்டு சமோலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 5,700 பேர் உயிரிழந்தனர்.