டேராடூன்: தேவர்களின் பூமி, பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலம், இமய மலையில் அமைந்துள்ளது. உத்தரா கண்டின் பனிச்சிகரங்களில் இருந்து கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. அங்கு சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமு னோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன.
பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை உத்தராகண்ட் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த 1970-ம் ஆண்டில் உத்தராகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின.
இதன் விளைவாக இயற்கை வளங்களை பாதுகாக்க கடந்த 1980-களில் சிப்கோ இயக்கத்தை மக்கள் உருவாக்கினர். எனினும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் இயற்கை வளங்களை சுரண்டின.
கடந்த 1991-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998-ல் மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999-ல் சமோலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூனில் மேகவெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு கள் ஏற்பட்டன. இதில் 5,700 பேர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு தபோவன் அணையில் கட்டப் பட்டிருந்த விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 83 பேர் உயிரிழந்தனர்.
இதன்பிறகும் தேசிய அனல் மின் நிறுவனம் சார்பில் தபோவன் அணை யில் விஷ்ணுகாட் நீர் மின் நிலைய திட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜோஷிமத் நகருக்கு அடியில் 16 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கத்தில் உயரழுத்தம் கொண்ட வாயு உருவாகி மேற்பகுதி நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்படுவ தாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜோஷிமத் பகுதியில் 16,709 பேர் வசிக்கின்றனர். சுமார் 7,600-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக ஜோஷிமத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவெடிப்பு மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. 570 வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜோஷிமத் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, “தேசிய அனல் மின் நிறுவனத்தின் திட்டங்களால் ஜோஷிமத் நகரம் தரைமட்டமாகி வருகிறது. இங்கு வாழும் மக்களின் உயிர், உடைமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அனல் மின் நிறுவன திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறும்போது, “ஜோஷிமத் பகுதியில் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். நானும் ஜோஷிமத்துக்கு சென்று ஆய்வு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார். நீர்மின் நிலையம் மற்றும் சாலை திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோஷிமத் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் சமோலி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் திரிபாதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய அனல் மின் நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.