விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு நான்கு வழிச்சாலைப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிய இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரம் உள்ள வழிபாட்டுத்தலங்களை அகற்றவும், அதற்காக இந்துசமய அறநிலையத்துறை மூலம் இழப்பீட்டுத்தொகை கணக்கெடுப்பு நடத்தி வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத்தொகையை வைத்து சம்மந்தப்பட்ட ஊர்மக்கள் புதிய கோயில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கெங்கராம்பாளையத்தில் உள்ள 70 ஆண்டுகள் பழமையான கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலை ஊர்மக்கள் இடித்து அகற்றாமல் ஜாக்கி மூலம் இடமாற்றம் செய்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்துள்ள கெங்கராம்பாளையத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில், மக்களுக்கு ஊர் தெய்வமாக இருப்பதால், ஆண்டுதோறும் விமரிசையாக விழாக்கள், சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் செய்து வருவார்கள். இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிக்கு இக்கோயில் இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கோயிலின் கருவறை இடிபடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஊர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில், மாரியம்மன் கோயிலை இடிக்காமல், கருவறையை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதனை ஜாக்கி மூலம் அஸ்திவாரத்திலிருந்து 7 அடி உயரம் உயர்த்தியும், 61 அடி நீள தூரத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி பீகார் மாநிலத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நவீன இயந்திரமான ஜாக்கி மூலம் கோயிலின் கருவறையை, நகர்த்தும் பணி தொடங்கியுள்ளனர். இதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கட்டுமான வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோயில் அறங்காவலர் ராமச்சந்திரன், மார்க்கெட்கமிட்டி தொமுச தலைவர் மாரிமுத்து ஆகியோர் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் குடிசையில் வைத்து வழிபாடு செய்து வந்தோம். பின்னர், 2000ம் ஆண்டு பல லட்சத்தில் ஊர்மக்கள் கூடி கோயிலை கட்டினோம். கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கச்சொல்கிறார்கள்.
இந்துசமய அறநிலையத்துறை புதிதாக கட்டுவதற்கு ரூ.75 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளது. ஆனால், நகாய் நிறுவனம் ரூ.23 லட்சம்தான் இழப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் மேல்முறையீட்டு செய்துள்ளோம். கோயிலை இடிக்கவும் மனசில்லை. இழப்பீட்டு பணமும் பத்தவில்லை. எனவேதான், இந்த பணத்தில் கோயிலை இடமாற்றம் செய்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். ரூ.10 லட்சம் செலவில், ஜாக்கிமூலம் கோயில் இடமாற்றம் பணி நடந்து வருகிறது. 2 மாதத்தில் முடிவடைந்துவிடும் என்றனர்.