இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனைகளில் ஒருவரான மணிப்பூரை சேர்ந்த 29 வயதான சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியின் போது சஞ்சிதா சானுவிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்த தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் சஞ்சிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் விசாரணை நடத்தும். இதில் அவர் தவறு செய்தது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படுவதுடன் 4 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் சஞ்சிதா சானுவை இடைநீக்கம் செய்தது. 2 ஆண்டு கழித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஊக்க மருந்து சோதனைக்கான மாதிரி நிர்வாக குளறுபடியால் மாறிவிட்டது என்று கூறிய சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அவருக்கு விதித்த தடையை நீக்கியது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே தான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை என்று சஞ்சிதா சானு மறுத்து இருக்கிறார். ‘எனது சிறுநீர் சோதனையில் ஊக்க மருந்து எப்படி வந்தது என்பது எனக்கு புரியவில்லை. கடந்த முறை இதேபோல் பிரச்சினையில் சிக்கி பல வாய்ப்புகளை இழந்தேன். இதனால் நான் உட்கொள்ளும் சத்து பொருட்களில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்து தான் சாப்பிட்டு வந்தேன். இந்த முறை மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்பதில் குழப்பமாக இருக்கிறேன’ என்று சஞ்சிதா சானு தெரிவித்துள்ளார்.